காரைநகர் - ஊர்காவற்துறை கடற்பாதை சேவை கை மாற்றப்படுமா?

காரைநகர் - ஊர்காவற்துறை இடையிலான கடற்பாதை சேவை மட்டுப்படுத்தப்பட்டதால் அப்பாதையை பயன்படுத்தும் பல தரப்பினரும் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றனர். அந்த பாதையை காரைநகர் பிரதேச சபை ஆகிய எங்களிடம் தந்தால் அதனை திறம்படச் செய்வோம் என காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பிரதேச சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கோரினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

காரைநகரில் இருந்து ஊர்காவற்துறைக்கு பயணிக்கும் உத்தியோகத்தர்களாக இருந்தாலும் சரி, பொதுமக்களாக இருந்தாலும் சரி தற்போது பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இயக்கப்படுகின்ற குறித்த கடற்பாதை கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மண்ணெண்ணெய் இல்லாத காரணத்தால் இயங்காத நிலையில் காணப்பட்டது. அதற்கான மண்ணெண்ணெயை நாங்கள் பெற்றுக் கொடுத்து பாதையை இயங்கச் செய்தோம்.

தற்போது மண்ணெண்ணெய் செலவுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு இல்லாத காரணத்தால் பாதைச் சேவையின் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான சேவை நடைபெறுகிறது. இதனால் காரைநகரில் இருந்தும், ஏனைய பகுதிகளில் இருந்தும் ஊர்காவற்துறையில் உள்ள நீதிமன்றம், பொலிஸ் நிலையம், வைத்தியசாலை மற்றும் பிரதேச செயலகம் ஆகியவற்றுக்கு கடமைக்குச் செல்லும் ஊழியர்கள், பொதுமக்கள் தனியார் படகுக்கு ஒரு வழிப் பயணத்துக்கு நூறு ரூபா கொடுத்து தமது வாகனங்களுடன் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பயணம் செய்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் ஒரு மாதத்தில் 20 நாட்களுக்கு கடமைக்கு செல்வார்களானால் அவர்களது சம்பளத்தில் இருந்து இரு வழி பயணத்திற்கு 2000 ரூபா செலவிடப்படுகிறது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியால் அவர்கள் சம்பள உயர்வும் இல்லாமல் அவஸ்தைப்படும் நிலையில் அவர்கள் தமது குடும்பச் சுமையை எவ்வாறு சுமப்பார்கள் என சிந்தித்து பார்க்கவேண்டும்.

இந்த பாதையை இயக்குவதற்கு நாங்கள் 04.10.2022 அன்று நடைபெற்ற விசேட கூட்டத்தில் 58ஆவது இலக்க தீர்மானம் மூலம் எமது சபையிடம் அந்தப் பாதையை ஒப்படைக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு கடிதம் மூலம் அறிவித்தல் வழங்கியிருந்தோம். ஆனால் அவர்கள் எமக்கு இதுவரை எந்தவிதமான பதிலும் வழங்கவில்லை.

இந்த பாதையை எம்மிடம் வழங்கினால் சிறப்பான சேவையை எம்மால் வழங்க முடியும். அதுமட்டுமின்றி நிதிப் பிரச்சனை ஏற்படும்போது புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்ற உறவுகளிடமும் எமது பகுதிகளில் வாழ்கின்ற செல்வந்தர்களிடமும் நிதியை பெற்று சிறப்புடன் சேவையை வழங்க முடியும் என்றார்.

காரைநகர் - ஊர்காவற்துறை கடற்பாதை சேவை கை மாற்றப்படுமா?

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Read More
Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Read More
Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026

Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026

Read More